பாட்டாளி மக்கள் கட்சியில் தொடங்கிய குடும்ப அரசியல் சலசலப்புகள், தற்போது கட்சி உரிமை சர்ச்சையாக மாறி, நீதிமன்றத்தின் கதவுகளை நோக்கி செல்கிறது. கடந்த டிசம்பரில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்ததிலிருந்து தந்தை-மகன் இடையே மனக்கசப்பு ஆரம்பமானது. அதனை தொடர்ந்து, மே மாத வன்னியர் சங்க மாநாட்டில் நடந்த நிகழ்வுகள், ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினரிடையே நேரடி மோதலாக மாறின.

பொதுக்குழு, நிர்வாக அறிவிப்புகள், தலைமை உரிமை என, ஒவ்வொரு கட்டத்திலும் இருபுறமும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி, ராமதாஸ் நியமித்த பொதுச்செயலாளர் முரளி சங்கர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சென்னை ஐகோர்ட்டு, இந்த கூட்டத்துக்கு தடையில்லை எனத் தெளிவுபடுத்தியதும், பாமக அரசியல் பிரிவு இன்னும் பரபரப்பாகி வருகிறது.

இந்நிலையில், அன்புமணி தரப்பில் கட்சி உரிமை கோரி அல்லது பாமக அலுவலக முகவரி மாற்றம், சின்ன உரிமை போன்ற விவகாரங்களில் கோர்ட்டை அணுகும் சூழ்நிலை ஏற்படக் கூடும் என எதிர்பார்த்து, முரளி சங்கர், சமூக நீதிப் பேரவையின் மாநிலத் தலைவர் வழியாக கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். எந்தவொரு முடிவும் அவருடைய தரப்பை கேட்காமலே எடுக்கப்படக் கூடாது என அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பாமக அரசியலை மேலும் குழப்பத்தில் தள்ளும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.