இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. மக்கள் இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற தளங்களில் காணொளிகளைப் பார்த்து, அதில் காட்டப்படும் வாழ்க்கை முறையையே தங்கள் வாழ்க்கையிலும் எதிர்பார்க்கின்றனர். கணவன்-மனைவி, அண்ணன்-தங்கை, நண்பர்கள் என எல்லா உறவுகளிலும் இது பொருந்தும். உதாரணமாக, ஒரு கணவர் தனக்கு இப்படிப்பட்ட மனைவி வேண்டும் என்று ஒரு காணொளியை மனைவிக்கு அனுப்புவார். அதேபோல், மனைவி தனது கணவர் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வேறொரு காணொளியை அவருக்கு அனுப்புவார். ஆனால், இந்தக் காணொளிகள் நம்மை எப்படி மனரீதியாக பாதிக்கின்றன என்பதை ஒரு வைரல் இன்ஸ்டாகிராம் காணொளி அழகாகக் காட்டியுள்ளது.

அந்தக் காணொளியில், கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் குறை கூறும் வகையில் காணொளிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஒரு நாள், தவறுதலாக இருவரும் ஒருவருடைய மொபைலை மற்றவர் எடுத்துப் பார்க்கும்போது, கணவரின் மொபைலில் மனைவியைக் குறை கூறும் காணொளிகளும், மனைவியின் மொபைலில் கணவனை குறை கூறும் காணொளிகளும் மட்டுமே இருப்பதைக் காண்கின்றனர். இதை உணர்ந்த இருவரும், இந்தக் காணொளிகள்தான் தங்கள் உறவில் பிரச்சினைகளை உருவாக்கியது எனப் புரிந்து, இனி தங்களை மாற்றிக்கொள்ளாமல் நாமாகவே இருப்போம் என முடிவு செய்கின்றனர். இந்தக் காணொளி, சமூக வலைதளங்களின் தாக்கத்தை எளிமையாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்துள்ளது.