உத்தரப் பிரதேசம், மீரட் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திடீரென வெறித்தனமான தாக்குதல் நிகழ்ந்தது. சாஹ்தனா பகுதியைச் சேர்ந்த 24 வயது விற்பனையாளர் பாபி கௌதம் மீது சில இளைஞர்கள் கத்தியால் தாக்கியதை ஒளிப்பதிவு செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
यूपी – मेरठ में गणेश मूर्ति विसर्जन शोभायात्रा में बॉबी गौतम की हत्या का Live Video – https://t.co/eopf8pRrdZ pic.twitter.com/ViM8z5LVqr
— Sachin Gupta (@SachinGuptaUP) September 7, 2025
பாபி கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் இடையே ஏற்கனவே ஏற்பட்ட சண்டைக்கு பிறகு, இரு தரப்பும் சமாதானமாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஊர்வலத்தின் போது அதே குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென பாபியை கத்தியால் தாக்கினர். பலத்த காயங்களுடன் பாபி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரை மேற்சிகிச்சைக்காக கங்கர்கேரா மருத்துவமனைக்கு மாற்றிய போது, அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. குடும்பத்தினர் காவல் நிலையம் முன்பு, போலீசாரின் அலட்சியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களது மகனுக்கு நீதியை வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
