கொடைக்கானல் அருகே உள்ள சின்னப்பள்ளம் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கர்நாடக பதிவெண் கொண்ட ஒரு லாரியை, நெல்லையைச் சேர்ந்த டிரைவர் ஓட்டிய நிலையில், பர்னிச்சர் பொருட்களை இறக்கி வைக்க அந்த கிராமத்தை நோக்கி வந்துள்ளார். வீட்டு முகவரியை கூகுள் மேப்பில் தேடி சென்ற அவர், அதன் வழிகாட்டுதலின்படி, தவறாக குறுகிய சாலையில் நுழைந்ததால் விபத்து நேர்ந்தது.

பாக்கியபுரம் குடியிருப்பு பகுதியில் லாரி சென்றபோது, மேடான பகுதியிலிருந்து லாரி திடீரென பின்னோக்கி நகரத் தொடங்கியது. கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்பு கம்பியை இடித்து, பள்ளத்தாக்கின் விளிம்பில் பறந்து வந்து தொங்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று டிரைவரை உயிருடன் மீட்டனர். “கூகுள் மேப்பில் காட்டிய சாலையைத் தான் நம்பி வந்தேன், இதுதான் விபத்துக்கு காரணம்,” என அதிர்ச்சியுடன் டிரைவர் கூறியுள்ளார்.

இதேபோல், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும், சமூக வலைதளங்களில் பார்க்கும் புகைப்படங்கள் மற்றும் கூகுள் வரைபடம் அடிப்படையில் தனியாகச் செல்லும் சூழ்நிலையில், சரியான தகவல் இல்லாததால் பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே, சரியான இடத்துக்குச் செல்வதற்கு, முன்னதாக கொடைக்கானல் போலீசார் அல்லது உள்ளூர் வியாபாரிகளிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.