விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள டி.கரிசல்குளம் கிராமத்தில், காதலின் பெயரில் இரண்டு பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ஈசுவரராஜா, நாச்சியார் தம்பதியின், இரண்டாவது மகளான 10ம் வகுப்பு மாணவி இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இவரது முதல் மகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவியுடன் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவர் கடந்த ஆறு மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த அவருக்கு, அவரது பெற்றோர் தந்தை முத்துப்பாண்டியன் மறைந்த நிலையில், தாய் குருபாக்கியத்துடன் வாழ்ந்து வந்தார். இருவரின் காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், மனவேதனையில் இருவரும் தற்கொலைக்கு முடிவெடுத்தனர்.
நேற்று, மாணவி வீட்டில் தனியாக இருந்த வேளையில் ஆகாஷ் வீட்டிற்கு வந்து, இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளனர். மின்விசிறியில் தூக்குப்போட்டு இருவரும் உயிரை மாய்த்தனர். பிற்பகலில் வீட்டிற்கு வந்த மாணவியின் தாய் நாச்சியார், தனது மகளையும் ஆகாஷையும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதும் அதிர்ச்சியில் கதறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
அலங்குளம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவியின் உடல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு, ஆகாஷின் உடல் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
