புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், நேற்று அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவாயில் அருகே நின்றிருந்த அவரை சுற்றி வளைத்த கட்சியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட சூழ்நிலையில், ஏர்போர்ட் மூர்த்தியும் பதிலடி கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏர்போர்ட் மூர்த்தி, “திருமாவளவனின் பட்டியலின சமூக விரோத போக்கை நான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். அவர் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று நான் இரண்டு முறை போலீசில் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் ‘நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என கூறிவிட்டனர். திருமாவளவன் லுங்கி கட்டிக்கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு பெசன்ட் நகர் பகுதிக்கு ஆட்டோவில் வருவது எனக்கு தெரியும். எனது வீடும் அங்கேதான் இருக்கிறது. எனவே, இந்த போக்கை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், “ஏர்போர்ட் மூர்த்தி எங்கள் கட்சியினரை பாக்கெட் கத்தியால் சரமாரியாக தாக்கியதில், இருவருக்கு காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், சென்னை அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக்கியுள்ளது.