“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்துள்ள பிரச்சாரப் பயணம் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பெருந்திரளான மக்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.
பிரச்சார மேடையில் பேசும் போது, “100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஏழை மக்களுக்கு கூட திமுக அரசு ஊதியம் வழங்க முடியாத நிலையில் உள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி அதிமுகதான்,” என்று கூறிய எடப்பாடி, திமுக அரசின் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கினார். “ஏழைகளுக்கான எந்த புதிய திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை. மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் கூட அதிமுகவின் போராட்டத்தின் விளைவாகவே அமலுக்கு வந்தது,” என நினைவூட்டினார்.
தொடர்ந்து, “திமுக அரசு கமிஷனிலும், கரப்ஷனிலும் முன்னிலை வகிக்கிறது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. மக்கள் இப்போது உணர்ந்து விட்டனர், யாரது ஆட்சி அவர்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்தது என்பதையும், யாரது ஆட்சி வெறும் விளம்பரத்தில்தான் இருக்கிறது என்பதையும்,” என்றார் எடப்பாடி பழனிசாமி.
