அதிமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இதுகுறித்து தெரிவித்ததாவது:

இது முழுமையாக அதிமுகவின் உட்கட்சி விவகாரமாகும். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், கட்சி ஒருங்கிணைவதை உறுதி செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளர். அவர் இன்று மனம் திறந்து பேசுவதாக கூறினார். ஆனால் அவர் அளித்த பேட்டியில் இருந்து பார்வையிட்டால், அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்பது தெளிவாகிறது. யார் வெளியேறி, யாரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை அவர் வெளிப்படையாகக் கூற வேண்டும்.*

“அதிமுக ஒரு திராவிடக் கட்சி. பெரியார் வழிக்கண் காட்டும் இயக்கம் எனும் அடிப்படையில், அந்தக் கட்சியை விடுதலை சிறுத்தைகள் மதிக்கின்றது,” என்றும் அவர் கூறினார்.

மேலும், சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி மாற்றங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த திருமாவளவன் கூறியதாவது: ஜிஎஸ்டி மீதான மறுசீரமைப்பு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக இல்லை. அமெரிக்கா இந்தியா மீது விதித்து உள்ள 50% வரி வீதத்தை குறைக்கும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருவதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ஆனால், 28% ஆக இருந்த வரி தற்போது 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளமை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், சிறுவணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்,” என அவர் குறிப்பிட்டார்.