கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மருத்துவமனை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் முக்கியமான மருத்துவ சேவை மையமாக உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் வெட்டுமணி பகுதியில், ஓணம் பண்டிகையையொட்டி பெண் ஊழியர்கள் குத்தாட்டம் ஆடி மகிழ்ந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.
இதில், அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு, ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் நடந்தது தெரிய வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதி, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் இயங்கும் இடமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், அங்கு அத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படுவது நோயாளிகளின் நிம்மதிக்கு இடையூறாக இருந்திருக்கக்கூடும் என பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
“நோயாளிகளுக்கு தடை இல்லாமல் வேறொரு இடத்தில் விழா நடத்தலாமே?”, “ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு இது தெரியாதா?” என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சீரழிவு மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. இது தொடர்பாக அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும் எனக் குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன.
