சிவகங்கை மாவட்டத்தின் தமராக்கி கிராமத்தில், ஒரே நாளில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிராம். தாய்லாந்தில் வேலை பார்த்து வரும் இவரின் மனைவி பிரமிளா (27) மற்றும் இரண்டு குழந்தைகள் சொந்த கிராமத்தில் வசித்து வந்தனர். பிரமிளாவின் உறவினரான அஜித்குமார் (25) அதே பகுதியில் சில வீடுகள் தூரத்தில் தனி வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பிரமிளா அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, சில மணி நேரத்துக்குள், அஜித்குமாரும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவல் கிடைத்ததும், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது உடல்களையும் கைப்பற்றி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
“சம்பவத்தன்று இரவு பிரமிளா மற்றும் அஜித்குமாருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனவேதனையில் பிரமிளா தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வருகிறது. இந்த தகவலை அறிந்த அஜித்குமார், போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் இருக்கிறதா? என்பது குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று தெரிவித்தனர்.
