திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தது, பெற்றோர் படுகாயம் அடைந்த சம்பவம் பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி அருகே முள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (30) என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் மகள் அனாமிகா (4) ஆகியோர் கடந்த வாரம் ஒரு மந்திரவாதியைச் சந்திக்கச் பைக்கில் சென்றனர்.
அப்போது, தச்சூர் சாலை பகுதியில், சுமார் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திடீரென சண்டையிட்டு பைக் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்ததில், மூவரும் தரையில் விழுந்து படுகாயமடைந்தனர்.
உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறுமி அனாமிகா அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்தார். கார்த்தியும், தமிழ்ச்செல்வியும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கார்த்தி அளித்த புகாரின் அடிப்படையில், ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், தெருநாய்களின் பெரும் தொல்லையால் ஏற்படும் பாதுகாப்பு அபாயம் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், நகராட்சி நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
