பீகார் மாநிலத்தில் வாக்காளர்களின் உரிமையை வலியுறுத்தவும், வாக்கு மோசடிகளை எதிர்த்தும், காங்கிரஸ் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ஆம் தேதி வரை 16 நாட்கள் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை மேற்கொண்டார்.

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 27-ஆம் தேதி பீகார் மாநிலம் தர்பங்காவில், ராகுல் காந்தியும், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுமும், தொண்டர்கள் சூழவந்த புல்லட் பைக் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணிக்காக, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், உள்ளூரில் கிடைத்த சில இருசக்கர வாகனங்களை தற்காலிகமாக பயன்படுத்தினர். இதில், சுபம் என்ற இளைஞருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இடம் பெற்றது. ‘பேரணி முடிந்ததும் பைக் திருப்பி தரப்படும்’ என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பேரணி முடிந்த பிறகும், சுபத்தின் பைக் மட்டுமே திருப்பி தரப்படாமல் காணாமல் போனது. பிற பைக்குகள் அனைத்தும் திரும்பிய நிலையில், தனது வாகனம் மீட்கப்படாததைத் தொடர்ந்து சுபம் கவலையில் ஆழ்ந்தார்.

 

இந்த தகவல் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது. உடனே, சுபம் பாட்னாவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நிறைவு விழாவில், ராகுல் காந்தி அவருக்கு அதே மாடலிலான புதிய பைக்கை நேரில் பரிசாக வழங்கினார்.

புதிய பைக்கின் சாவியை ராகுல் காந்தியிடம் இருந்து பெற்றுக்கொண்ட சுபம், “எனது பழைய பைக்கையே மீண்டும் புதிதாக பெற்ற உணர்வாக உள்ளது” எனக் கூறி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வு, யாத்திரையின் ஒரு மனதைக் கொள்ளை கொள்ளும் தருணமாக மாறியதோடு, காங்கிரசின் பொதுமக்கள் நல மனப்பான்மையைச் சுட்டிக்காட்டியதாக ,  பாராட்டியுள்ளனர்.