உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நீண்ட நாட்களாக அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையின்போது கோயில் பூசாரியின் பெயரும் போலீஸாரின் கவனத்துக்கு வந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என போலீஸார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், போலீஸாரின் கண்காணிப்பை மீறி பூசாரி அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதனால் போலீஸாருக்கு பூசாரி மீது மேலும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கோயிலில் அவரிடம் பயிலும் ஒரு சீடரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது இரு இளைஞர்களும் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் கோயில் வளாகத்திலேயே புதைக்கப்பட்டதாகவும் அந்த சீடர் தெரிவித்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட தகவலின்படி, ஒரு இளைஞர் பூசாரியின் தனிப்பட்ட உறவு தொடர்பான விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பூசாரி தனது நண்பருடன் சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
