பீகார் மாநிலத்தின்  ஒரு கிராமத்தில், நேற்று முன்தினம்  இரவு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல, உயிரின் பாதுகாப்புக்கும் எச்சரிக்கை அளிக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது . வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த 3 மாதக் குழந்தை மீது குரங்கு ஒன்று திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது.

குழந்தையின் தலையில் இருந்து முடியை பிடித்து இழுத்து  கிழித்துவிட்டது. அந்தக் குழந்தையை காப்பாற்றச் சென்ற தாய்மீதும் குரங்கு தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, இரத்தமாகக் கிடந்த குழந்தையை, உறவினர்கள் உடனடியாக  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து  குழந்தையின் தாய் ரஞ்சு தேவி கூறுகையில், “நானும்  குழந்தையும் வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்தோம் . அப்போது சில குரங்குகள் வீட்டுக்குள் புகுந்தன. ஒன்றை நான் விரட்ட வீட்டுக்குள்  சென்றபோது, மற்றொரு குரங்கு என் குழந்தையை பிடித்து அதன் தலைமுடியை இழுத்து கிழித்தது. குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது. குழந்தையை காப்பாற்ற நான் ஓடியபோதும் குரங்குகள் அச்சுறுத்தின” என்று கூறினார்.

மருத்துவமனையில் தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் நிலை தற்போது ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஊர் முழுவதும்  பயம் பரவியுள்ளது. “குரங்குகளின் அட்டூழியத்தால் ஏற்கனவே அவதிப்பட்டு வருகிறோம். குழந்தையையும் விட்டுவைக்காத அளவுக்கு தற்போது போய் விட்டன. துரிதமாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.