ராஜஸ்தானில் நடந்த கொடூரமான குடும்ப வன்முறைக் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியான கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உதய்பூர் மாவட்டத்தில் 2017ம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கிஷாந்தாஸ் என்பவர் தனது மனைவி லட்சுமியை “கருப்பு நிறமும், கொழுப்பும் உடையவள்” என அவமதித்து, அழகு மருந்து என்ற பெயரில் அவரது உடலில் ரசாயனங்களை பூசி,  தீ வைத்துள்ளார். தீயில் நன்கு எரிந்த நிலையில் சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்ட லட்சுமி பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த மனிதகுல சமூதாயத்தையே உலுக்கியது. மரணமடையும் முன் தனது கணவர் தான் இதற்கு முழுமையாக பொறுப்பென கூறி, லட்சுமி ஒரு வலுவான வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் அளித்திருந்தார். இதில், “மருந்து” என்று கூறி ரசாயனம் பூசியதோடு, மீதமுள்ள ரசாயனத்தையும் அவர்  மீது ஊற்றி கதவைத் பூட்டிவிட்டு  ஓடியதாக சுட்டிக்காட்டியிருந்தார். தன்னைக் காக்க முயன்ற அவரது மாமியார் மற்றும் மைத்துனி வந்தும், தீயால் ஏற்பட்ட பெரிய பாதிப்புகளை தவிர்க்க முடியவில்லை.

இந்த வழக்கில் அரசு தரப்பில் 14 சாட்சிகள், 36 ஆவணங்கள், மரணவாக்குமூலம், எஃப்எஸ்எல் மற்றும் மருத்துவ சான்றுகள் அனைத்தும் வலுவாக  முன்வைக்கப்பட்டன. நீதிபதி ராகுல் சவுத்ரி, இது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டும் எதிரானது அல்ல, மனிதகுலமே துயருறும் வகையிலான கொடூரமான குற்றம் எனக் குறிப்பிடினார். இது போன்ற கொடூர வன்முறைகளைத் தடுக்க கடுமையான தண்டனை அவசியம் எனக் கூறிய அவர், குற்றவாளிக்கு தூக்கு தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்தார்.

இது ஒரு சமூகத்திற்கு வலியுறுத்தப்படும் நீதியின் எடுத்துக்காட்டு. “அழகு” என்ற பெயரில் நடத்தப்படும் மோசடி, பெண்களை பொருளாக பார்ப்பது, குடும்பங்களில் நிலவும் வன்முறைகளை சமூகம் நிமிர்ந்து எதிர்கொள்ளும் நேரமாகும் இது. குற்றவாளியை சீர்திருத்த முடியாத அளவுக்குத் தாண்டிய வன்முறையாக இது பார்க்கப்பட்டதால், நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகத்தில் நீதிக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என சட்டதுறையினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.