திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர், தனியார் கல்லூரியில் செவிலியர் பயிற்சி பெற்று வந்தார். கடந்த மாதம் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, பெற்றோர் அவரை ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தினர். இதையடுத்து, பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், மாணவி தனது அண்ணன் முறை உறவினரான 17 வயது சிறுவனுடன் காதல் வயப்பட்டு, எல்லை மீறிய உறவால் கர்ப்பமானது தெரியவந்தது.
இதனால், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தகவல். கர்ப்பமான மகளின் நிலையால் மனமுடைந்த பெற்றோர், கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்தனர். கடந்த மாதம் 13-ம் தேதி, ஆந்திர மாநிலம் நகரி அருகே பன்னூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்றனர்.
அங்கு ஒரு செவிலியர் மூலம் கருக்கலைப்பு செய்யப்பட்டது. ஆனால், வீடு திரும்பிய மாணவியின் உடல்நிலை மோசமடையவே, தனியார் மருத்துவமனை மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கருக்கலைப்பு செய்த செவிலியர் மற்றும் அவரது உதவியாளரை திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை தேடி வருவதுடன், கருக்கலைப்பு முயற்சியில் ஈடுபட்ட பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.
