கென்யாவில் ஒரு தனியார் வனவிலங்கு சரணாலயத்தில் ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர், யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றும் காட்சி கொண்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். “ஒரு தந்த நண்பருடன் ஒரு தந்தம்” என்கிற தலைப்பில் அவர் வெளியிட்ட இந்த வீடியோ, விரைவில் வைரலாகி, வனநல ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

வனவிலங்குகளை தவறான முறையில் பிரதிபலிக்கிறதாக கண்டித்த பயணிகள், இது வனவிலங்குகள் நலத்துக்கு எதிரானது என வலியுறுத்தினர். தகவல்கள் பரவியதையடுத்து, கென்யா வனவிலங்கு சேவை (KWS) விசாரணையைத் தொடங்கியது. ஆரம்பத்தில் அந்த திரவம் பீர் எனக் கூறப்பட்டாலும், பின்னர் அது வெறும் குளிர்பானம் என தகவல் வெளியாகியது. பிபிசி செய்தி நிறுவனமும் இதை உறுதிப்படுத்தி, அது லைக்கிபியாவில் உள்ள ஓல் ஜோகி கன்சர்வேன்சியில் படமாக்கப்பட்டது என தெளிவுபடுத்தியது.

இதனையடுத்து அந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், விசாரணையில் மேலும் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த நபர் தனது உண்மை பெயரை சமூக வலைதளங்களில் பயன்படுத்தவில்லை என்றும், விலங்குகளுடன் சேர்ந்து அடிக்கடி வீடியோக்கள் பதிவிடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

அவர் டிக்டாக்கில் தன்னை “அட்ரினலின் போதை மருந்து பிடித்தவர்” என வர்ணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. யானைகளுக்குக் கேரட் கொடுப்பது முதல் காண்டாமிருகத்துடன் நெருக்கமாக இருப்பது வரை பல வகையான வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த செயல் வனவிலங்கு நல சட்டங்களை மீறுகிறதா என்பதையும் KWS தீவிரமாக ஆய்ந்து வருகிறது.