ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகளான ஷேக்கா மஹ்ரா, ‘துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். 2023ஆம் ஆண்டு, ஷேக் மனா பின் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், கடந்த ஆண்டு மே மாதத்தில் குழந்தைக்கு தாயானார். ஆனால் அதனையடுத்த சில வாரங்களில் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது 31 வயதான ஷேக்கா மஹ்ரா, உலக பிரபலமான ராப்பர் பிரெஞ்ச் மொன்டானாவுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாதம் பாரிஸில் நடைபெற்ற ஃபேஷன் வீக்கில், இவர்கள் இருவரும் தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியதாக மொன்டானாவின் பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். 2024ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்த ஜோடி மொராக்கோ, துபாய் உள்ளிட்ட இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டு வந்துள்ளனர்.
40 வயதான பிரெஞ்ச் மொன்டானா, பல்வேறு சர்வதேச ஹிட் பாடல்களால் புகழ்பெற்றவர். இவரது உண்மையான பெயர் கரீம் கார்பூச். முன்னதாக அவருக்கு தொழில்முனைவோர் நதீன் கார்பூச்சுடன் திருமணமாகி, 16 வயது மகன் ஒருவரும் இருக்கிறார். பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வரும் பிரெஞ்ச் மொன்டானாவும், துபாய் இளவரசியான ஷேக்கா மஹ்ராவும் இணையவுள்ளதாக வெளியான செய்தி, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
