இமாச்சலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, ஸ்கொடி பகுதியில் உள்ள கால்வாயில் இரட்டைக் குழந்தைகள் (பெண்) சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மண்டி மாவட்டத்தையே உலுக்கியது. இதுகுறித்து போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு பெண் குழந்தைகளை தூக்கி வீசும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில் ரோஹினா என்ற பெண் தான் அந்த கொலையை மேற்கொண்டவர் என அடையாளம் காணப்பட்டது.
மேலும், டிஎன்ஏ பரிசோதனையிலும், சிசிடிவி ஆதாரங்களிலும் உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், ரோஹினா தனது மாமியார் வீட்டை விட்டு வெளியேறி, ஜலந்தரில் மற்றொரு நபருடன் வாழ்ந்த போது இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பின்னர், மண்டி பகுதியில் உள்ள முன்னாள் கணவர் வீட்டிற்கு குழந்தைகள் இல்லாமல் திரும்பியதும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த கொடூரம் தொடர்பாக ரோஹினாவுக்கு எதிராக இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கில் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. குழந்தைகளை திட்டமிட்டு கொலை செய்தது உறுதியானதால், நீதிமன்றம் ரோஹினாவுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையையும், ரூ.10,000 அபராதத்தையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு, மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
