ஊழியர் பங்களிப்பு நிதி அமைப்பு, அதாவது EPFO, வருகிற 2025ஆம் ஆண்டில் தனது 8 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்காக புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. ‘EPFO 3.0’ என அழைக்கப்படும் இந்த புதிய முறையில், பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு பல புதிய வசதிகள் எளிதில் கிடைக்கப்போகின்றன.

இந்த திட்டத்தை உருவாக்குவதற்காக இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 2025 ஜூன் மாதம் இந்த திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், சில தொழில்நுட்ப சிக்கல்களால் இது சிறிது தாமதமாகும் எனத் தெரிகிறது.

இந்த புதிய முறையின் முக்கிய அம்சம், பிஎஃப் பணத்தை நேரடியாக ஏடிஎம் மூலம் எடுக்க முடியும் என்பது தான். உங்கள் யூனிவர்சல் அகௌண்ட் நம்பர் (UAN) செயல்படுத்தப்பட்டு, ஆதார் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவசர நிதி தேவைப்படும் நேரங்களில், பிஎஃப் பணத்தை உடனடியாக எடுத்து கொள்ளலாம். இது முழுமையாக ஆன்லைன் வழியில் செயல்படும் என்பதாலும், நீண்ட காகித வேலைகள் இல்லாமல், நேரம் மிச்சமாகும் என்பதாலும், ஊழியர்களுக்கு இது மிகப் பெரிய நன்மையாக இருக்கும்.

மற்றொரு முக்கியமான வசதி UPI மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும் என்பதாகும். இப்போது இந்தியாவில் யூபிஐ உபயோகம் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை EPFO 3.0 இல் இணைப்பதன் மூலம், உறுப்பினர்கள் தங்களுடைய பணத்தை எந்த நேரமும் எளிதாக பெறலாம். பழைய முறையில் ஆவணங்கள் சமர்ப்பித்து நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இனி இருக்காது.

மேலும், சிறிய திருத்தங்கள் அல்லது கிளெயிம் அப்டேட் செய்வதற்காக EPFO அலுவலகம் செல்வதற்குத் தேவையில்லை. உங்கள் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களில் திருத்தம் செய்ய விரும்பினால், அதை ஆன்லைன் ஓடிபி மூலம் சரி செய்துகொள்ளலாம். கிளெயிம் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ளவும், கணக்கை நிர்வகிக்கவும் இந்த புதிய அமைப்பு முழுமையாக உதவவிருக்கிறது.

முன்பு போல் உறுப்பினர் இறந்தால் அவரது குடும்பத்தினர் பிஎஃப் பணம் பெற பல சிக்கல்களை சந்திக்க வேண்டியதில்லை. குறிப்பாக சிறுவர்களுக்காக பாதுகாவலர் சான்றிதழ் தேவையில்லை. அதனால் குடும்பத்தினருக்கு அவசர நிதி உதவியை விரைவாக பெறும் வாய்ப்பு உருவாகும். மேலும், இந்த புதிய EPFO 3.0 தளத்தை மொபைல் போனிலும் எளிதாக பயன்படுத்த முடியும். PF கணக்கு விவரங்கள், பணம் செலுத்திய நிலை, கிளெயிம் விவரம் போன்ற அனைத்தையும் எப்போது வேண்டுமானாலும் காணலாம்.