மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் நிருபம் பால், நேற்று இரவு ஒரு திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 9 பேர், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்ததை அவர் பார்த்து, அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், இந்தச்செயல் அவருக்கு எதிராக திரும்பியது. இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொந்தளித்து அவரை தாக்கத் தொடங்கினர்.

ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள், நிருபம் பாலை கைகலப்பில் சிக்க வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்து, அவரது மூக்கில் இருந்து இரத்தம் வடிய தொடங்கியது. மேலும், “உன்னை கொன்று விடுவோம்” என அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த திடுக்கிடும் சம்பவம் அருகிலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதையடுத்து அங்கிருந்தவரகள், அவரை அந்த இளைஞர்களிடமிருந்து மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆசிரியரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் கண்டறிய முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.