வங்கிகளில் தனிநபர் கடன், வீடு, நகைக்கடன் உள்ளிட்ட கடன்கள் பெறும்போது பொதுவாக கோரப்படும் ‘சிபில் ஸ்கோர்’ இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

குறிப்பாக, வங்கிக்கடனுக்காக முதன்முறையாக விண்ணப்பிப்போர் சிபில் மதிப்பெண் இல்லாததால் கடன் மறுக்கப்படும் நிலைமைகள் உள்ளது. இந்த நிலையில், முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என்பதை மத்திய அரசு தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது, “முதல் முறையாக கடன் பெறும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை முன்வைத்து, வங்கிகள் கடனை மறுக்கக் கூடாது. ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதமே இதுகுறித்து அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

அதே நேரத்தில் வங்கிகள் தங்களது வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், கடன் விண்ணப்பதாரர்களின் வரலாறு, திருப்பிச் செலுத்தும் நடைமுறை, தீர்க்கப்பட்ட கடன்கள், தாமதங்கள், தள்ளுபடிகள் ஆகியவற்றைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என கூறினார். இதன் மூலம் புதிய கடனாளிகள் முன்னேற்றம் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.