திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில், எதிர்வரும் 2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். இதற்காக, ஆத்தூர் சாலையை ஒட்டி ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்த நிலையில், அந்தக் கூட்டத்துக்கிடையே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவரை மீட்டு கொண்டு சென்ற அந்த ஆம்புலன்ஸை, சில அதிமுக தொண்டர்கள் தடுக்கும் சூழல் உருவானது. வாகனத்தைத் தடுத்து நிறுத்தியதோடு, வாக்குவாதம் மற்றும் தகராறும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>

ஆம்புலன்ஸ் டிரைவர், விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டியும், அங்கு இருந்த சில அதிமுக தொண்டர்கள் கேட்பவர்களாக இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் தலையீடு செய்த பிறகே சூழ்நிலை தணிந்தது.

இதேநேரத்தில், சில நாட்களுக்கு முன்பு, “திமுகவினர் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி, பொதுக்கூட்டங்களில் தகராறு ஏற்படுத்துகிறார்கள்” என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதேபோன்று இப்போது திருச்சியில் நடந்த சம்பவம், அதிமுகவினர் முன்னமே கூறியிருந்ததாகவும், திமுகவினரால் திட்டமிட்டு ஏற்பட்டதாகவும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால், இது போன்ற அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு இடையில், மருத்துவ அவசர சேவையை பாதிப்பது தவறான செயலாகும் என பொதுமக்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.