தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் சிறப்பாக நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜய்யை நேரில் காணும் எண்ணத்தில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் வெற்றியை ஒட்டி உற்சாகம் நிலவிய நிலையில், அதே நேரத்தில் தொடர்ச்சியான இரங்கல் செய்திகள் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தின.
சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 33) என்பவர் நண்பர்களுடன் வேனில் சென்று கொண்டிருந்தபோது, மதுரை சக்கிமங்கலம் அருகே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், நீலகிரி மாவட்டம் கேம்ப் லையன் பகுதியை சேர்ந்த ரித்திக் ரோஷன் (18) என்பவர் மாநாட்டை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் காரில் பயணிக்கும்போது திடீரென மயக்கம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், அரியலூரை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர், மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு வீடு திரும்பும் போதே திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக மாநாட்டில் பங்கேற்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம், கட்சித் தொண்டர்களிடையே பரபரப்பையும், இரங்கலையும் ஏற்படுத்தி உள்ளது.
