மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் பேசிய போது, வழக்கமான தனிச் சொல்லாற்றலுடன் ஒரு குட்டிக் கதையை பகிர்ந்தார். அந்தக் கதை நிகழ்வில் இருந்தோர் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. உண்மை, நேர்மை, நம்பிக்கையின் மீது வலியுறுத்தும் விதத்தில் விஜய் கூறிய இந்தக் கதை, அவரது அரசியல் செயல்பாடுகளுக்கும் நேரடியாக சம்பந்தப்பட்டதாக இருந்தது.
“ஒரு நாட்டில் ராஜா, தன்னுடன் ஆட்சி நிர்வாகத்தை பகிர ஒரு நேர்மையான தளபதியை தேடுகிறார். 10 பேர் தேர்வு செய்யப்பட, அவர்களிடம் 3 மாதத்தில் விதை நெல்லை வளர்த்து வருமாறு கேட்டார். 3 மாதங்களுக்குப் பிறகு 9 பேர் தங்கள் விதை நெல்லை உயரமாக வளர்த்துவந்து காட்ட, ஒருவர் மட்டும் வெறும் கையுடன் வருகிறார். ‘நான் முறையாக தண்ணீர் ஊற்றி பார்த்தேன். ஆனால் அது முளைக்கவே இல்லை’ என கூறினார். அதற்குக் காரணம், ராஜா கொடுத்தது அவித்த விதை நெல் என்பதாலே அது வளர முடியாது. அதனால் உண்மையை சொன்ன ஒரே நபரான அவரைத் தான் ராஜா தளபதியாக தேர்ந்தெடுக்கிறார்” என்றார் விஜய்.
இந்தக் கதையின் மூலம், “திறமையை மட்டும் பார்க்கக்கூடாது, நேர்மையும் அவசியம்” எனும் கருத்தை வலியுறுத்தினார். “இந்த நாட்டுக்கு நேர்மையான நெஞ்சங்கள் தேவை. அந்த வகையில் உங்கள் அனைவரும் ராஜாக்கள். உங்கள் தேர்வை நம்பிக்கையுடன் செய்யுங்கள். அந்தத் தளபதியே உங்கள் வீட்டில் இருக்கிறார்” என உரையை முடித்தார் விஜய். ‘தளபதி’ என்ற சொல்லை அவர் சுட்டிக்காட்டும் விதத்தில் பயன்படுத்தியது, பார்வையாளர்களின் மனதையும், அரசியல் களத்தையும் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
