இன்ஸ்டாகிராம், டிக்டாக் அல்லது செய்தி செயலிகளில் சிறிது நேரம் உலாவுவது, தகவல்களைத் தெரிந்துகொள்ளும் எளிய பழக்கமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு செய்தியிலிருந்து மற்றொரு செய்திக்கு செல்லும்போது, மணிக்கணக்கில் நேரம் கடந்துவிடுவதுடன், உறக்க நேரமும் தொலைந்து போகிறது. இப்படி மனம்போன போக்கில் இணையத்தில் உலாவுவது இப்போது ‘டூம்ஸ்க்ரோலிங்’ என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது.

இது 2020-ல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு, 2023-ல் அகராதியில் இடம்பெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், புதுப்புது தகவல்களை அறிய வேண்டிய தேவையால் இந்தப் பழக்கம் பிரபலமானது. ஆனால், இது மனநலத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், இந்த டூம்ஸ்க்ரோலிங்கை வேலையாகச் செய்து பணம் சம்பாதிக்க முடியுமா? ஆம், அப்படி ஒரு வேலை உண்மையிலேயே இருக்கிறது!

மாங்க் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் விராஜ் ஷெத், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘டூம்ஸ்க்ரோலர்’ என்ற புதிய வேலை வாய்ப்பை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வேலைக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் 6 மணி நேரத்திற்கு மேல் உலாவிய அனுபவம் (ஸ்க்ரீன்ஷாட் உடன்), படைப்பாளர் கலாசாரத்தில் ஆர்வம், புதிய படைப்பாளர்களை அறிந்திருத்தல், ஆங்கிலம் மற்றும் இந்தியில் புலமை, எக்ஸெல் பயன்பாட்டில் திறன் ஆகியவை தேவைப்படுகின்றன.

இந்த வேலை, சமூக ஊடகங்களில் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, புதிய போக்குகளைப் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பை உள்ளடக்கியது. ஆனால், இப்படி தொடர்ந்து உலாவுவது மனநலத்தை பாதிக்கும் என்பதால், தகவல்களை உள்வாங்குவதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் இடையே சமநிலையை பேணுவது முக்கியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.