மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில்  இரவு நேரத்தில் நடந்த கொடூரமான தாக்குதல் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், 6 பேர் கொண்ட கும்பல் ஒருவர் இளைஞரை நெடுநேரமாக அடித்து, தலைமுடியை இழுத்து, அவரை  தங்கள் கால்களைத் தொட்டால் தான் விடுவோம் என மிரட்டி அவமதிக்கின்றனர். மேலும், ‘அப்பா’ என அழைக்க வற்புறுத்தியுள்ள இந்த அதிர்ச்சி தரும் வீடியோ திங்களன்று வைரலானது.

பாதிக்கப்பட்டவர் அன்ஷுல் குர்ஜார் என்ற இளைஞர். அவரை இரவு 2 மணியளவில் வீர் சிங் தோமர், விக்ரம் சிங் தோமர், தேவராஜ் பர்மர், மான்டி சவுகான், அங்கித் தோமர் உள்ளிட்டவர்கள் ஆம்கோ சாலைக்கு அழைத்து சென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

“>

 

இவர்கள் இப்படியொரு செயலை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பின்னர், “போலீசில் புகார் அளித்தால் கொலை செய்யப்படும்” என மிரட்டியதால், பயந்த பாதிக்கப்பட்டவர் ஆரம்பத்தில் புகார் அளிக்கவில்லை.

வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், இந்தர்கஞ்ச் காவல் வட்டார சிஎஸ்பி ராபின் ஜெயின் வழிகாட்டலின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர் மற்றும் அவருடைய சமூகத்தினரிடம் புகார் பெற்ற போலீசார் தற்போது சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மாநிலமெங்கும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.