ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் ஒரு இளம்பெண் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் இலங்கை மன்னர் ஆண்டகுளம் பகுதியைச் சேர்ந்த விதுர்ஷியா(25) என்பது தெரியவந்தது. இவர் தனது தாய் தந்தையுடன் பழனியில் இருக்கும் அகதிகள் முகாமில் வசித்து வந்துள்ளார். அப்போது ஒரு வாலிபருடன் அவருக்கு காதல் மலர்ந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு சென்ற விதுர்ஷியாவுக்கு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வர விசா கிடைக்கவில்லை. இதனால் தனது காதலனை கரம் பிடிக்க விதுர்ஷியா கள்ளப்படகில் இந்தியாவிற்கு வர முடிவெடுத்தார். இதற்காக தனது நகையை விற்று இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திரட்டி கள்ளப்படகில் ராமேஸ்வரத்திற்கு வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் முகாமில் தங்க வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
