உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தோஹத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 வயதான சுந்தர் என்ற நபர் கடந்த சனிக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் மயக்கம் அடைந்து பேச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தொடர் வாந்தியும் எடுத்துள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக ஹாலட் மருத்துவமனைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் நோயாளியை பராமரிக்க தகுந்த மருத்துவமனை ஊழியர்கள் இல்லாததால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு காவலர் ஒருவரை பாதுகாப்புக்காக அழைத்துச் செல்ல மருத்துவமனை மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால் எந்த ஒரு காவலரும் வரவில்லை என்பதால் நோயாளி கவனிக்கப்படாமல் மருத்துவமனையில் விடப்பட்டுள்ளார். இதனிடையில் நோயாளியின் நிலைமை மிகவும் மோசமானதால் இரவு 11 மணி அளவில் சுந்தர் உயிரிழந்தார். அதன் பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் அவரின் உடலை வார்டிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
உடல் கிட்டத்தட்ட 11 மணி நேரம் கவனிப்பின்றி கிடந்ததால் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மற்ற நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நோயாளிகள் அளித்த புகாரின் படி இச்சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த மாவட்ட நீதிபதி உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி உடனடியாக உடலை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன் பின் அவுட்ஷோர்ஸ் துப்புரவு பணியாளர்கள் மூலம் உடல் இறுதியாக பிணவறைக்கு மாற்றப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறியதாவது, ஆம்புலன்ஸ் எதுவும் கிடைக்காததால், காவலர் ஒருவரின் பாதுகாப்பு இல்லாமல் நோயாளியை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தலைமை மருத்துவர் கண்காணிப்பாளர் ஏ .கே. சிங் அந்த மருத்துவமனையின் வார்டுகள் அனைத்தையும் ஆய்வு செய்துள்ளார்.
மேலும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமான செயலால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
