மத்தியப் பிரதேசம் மொரேனாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜௌரா மேம்பாட்டுத் தொகுதி கெர்லி கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்தத் ராஜக்கின் 20 வயது மகள் சுர்பி ராஜக், செவ்வாய் கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்தது.

உடனடியாக குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், சிகிச்சை பலனளிக்காமல் சுர்பி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு புதன்கிழமை அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ஆனால், சுர்பியை கடித்த பாம்பு வீட்டிலேயே மறைந்து இருந்ததால், குடும்பத்தினர் பெரும் பீதியில் மூழ்கினர்.

மகளை இழந்த துக்கத்துடன், வீட்டில் பாம்பு இருப்பது என்ற அச்சமும் அவர்களை வாட்டியது. இதையடுத்து, குடும்பத்தினர் உடனடியாக பாம்பாட்டிகளை அழைத்து, வீட்டில் தேடுதல் நடத்தினர். அப்போது மறைந்து இருந்த பாம்பும் அதனுடன் இருந்த இன்னொரு பாம்பும் பிடிக்கப்பட்டன. இந்த சம்பவம், கிராம மக்களிடையே பாம்பு தாக்குதல் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் பேசும் பொருளாகியுள்ளது.