இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவுக்கு ஏற்பட்ட இந்த புதிய சவால், அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் உமரியா கிராமத்தில் ‘பிரஹ்மா’ பெம்ல் (BEML) ரயில் உற்பத்தி மையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியா வேகமாக வளர்வதை சிலர் விரும்பவில்லை.

எல்லாருக்கும் முதலாளி நான் தான் என்று நினைக்கும் சில சக்திகள், இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என்று யோசிக்கிறார்கள்” என்று தொடங்கி, “இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை அதிக விலை கொண்டதாக மாற்றி, உலக நாடுகள் வாங்குவதை நிறுத்த செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது” என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், “இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க எந்த உலக சக்தியும் முடியாது. விலை உயர்த்தும் முயற்சிகள், வரி விதிப்புகள், எந்த தடையும் நம்மை வல்லரசாக மாறுவதைத் தடுக்காது. இந்தியா தனது முன்னேற்றப் பாதையில் தடையின்றி செல்லும்” என்று உறுதியளித்தார். ராஜ்நாத் சிங்கின் இந்த கடும் எச்சரிக்கை, அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கைக்கு நேரடி பதிலாக பார்க்கப்படுகிறது.