சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி கடத்தப்பட்ட 18 மாத குழந்தை, 13 நாட்கள் கழித்து தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் துர்க் ரயில் நிலையத்தில் பயணம் மேற்கொள்ள வந்தபோது, இரவு தங்கியிருந்தனர்.
மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்தபோது, 18 மாத மகன் கார்த்திக் காணாமல் போனது தெரியவந்தது. உடனடியாக தேடியும் கிடைக்காததால், துர்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மூலம், சுமார் 45 வயது ஆண் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்வது உறுதியாகி, அவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சாத்தனூரைச் சேர்ந்த ஆறுமுகம் என அடையாளம் காணப்பட்டார்.
துர்க் ஜிஆர்பி போலீசார், மயிலாடுதுறை ஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் ஆறுமுகத்தை கும்பகோணத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, சத்தீஸ்கரில் இருந்து வந்த பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளியை பிடிக்கும் பணியில் உதவி துணை ஆய்வாளர் ஜனக்லால் திவாரி, ஆய்வாளர் சுதிர்குமார் மற்றும் தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
விசாரணையில், குழந்தையை ஏன் கடத்தினாய் எனக் கேட்டபோது, “பிடித்திருந்ததால் தூக்கி வந்து விட்டேன்” என ஆறுமுகம் பதிலளித்தது, போலீசாரையும் கேட்டவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி, குழந்தை பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
