திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் கூலி தொழிலாளி. அவரது மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு சிவகிருஷ்ணன் (14) மற்றும் நந்தனா (11) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நந்தனா, சித்தரேவில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்ற நிலையில், அவரது சகோதரர் சிவகிருஷ்ணனும் வெளியே சென்றுவிட்டார். பின்னர் நந்தனா பள்ளிக்கு கிளம்ப தயாராக இருந்தபோது, வீட்டின் பீரோ மேல் பகுதியில் இருந்த புத்தகத்தை எடுக்க கட்டிலில் ஏறி நின்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறியதால், வீட்டின் உள்ளே துணி காய வைக்க கட்டியிருந்த கயிற்றில் தவறி விழுந்தார். இந்தச் சூழலில் தலை கயிற்றில் சிக்க, அந்த நிலையில் இருந்து தப்பிக்க முயன்றும் முடியாமல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமியின் சாவை கண்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த துயரச்சம்பவம் சித்தரேவு கிராமத்தில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
