தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியில் விவசாயி மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது வனத்துறையினர் அவரைத் தாக்கி கீழே தள்ளினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சமரசம் பேசி முடிவுக்கு கொண்டு வந்தனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது போல் சிலர் அறிய வகை மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் இதனை கண்டித்து தேனி மாவட்டம் போடி அருகே போராட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமோன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் கால்நடைகளுடன் வனப்பகுதிகளுக்குள் நுழைய முயன்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் சென்றனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது, கால்நடைகள் வனப்பகுதிகளுக்குள் சென்றால் மட்டுமே அவைகள் இருக்கும்.

கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். எனவே ஆடு மாடுகளுக்கும் ஓட்டுரிமை வேண்டும். இலங்கையில் நடந்தது மட்டும் இனப்படுகொலை அல்ல. தமிழகத்தில் மது பழக்கத்தை பழகி சாமானிய மக்களை கொல்வதும் படுகொலை தான் என்று தெரிவித்தார்.

இதையடுத்து மலையேறி மாடு மேய்க்கும் சீமானின் போராட்டத்தை வனத்துறையினர் பேசி தடுத்து நிறுத்தினர். இருப்பினும் இதனை மறுத்த சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் வனப்பகுதிகளுக்குள் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் விதித்த தடையை மீறி சீமான் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.