திருவள்ளூர் மாவட்டம் திருத்தணை அருகே உள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வழிச்சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக ஒப்பந்ததாரர்களால் வடமாநிலத்திலிருந்து வேலைக்கு அழைத்துவரப்பட்ட இளைஞர்கள், நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தற்காலிக குடிசைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கனகமாசத்திரம் அருகே பாலப்பணிகள் நடைபெறும் பகுதியில்,  சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரு இளம்பெண் ஒதுக்குப்பாதையில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இக்ராம் என்ற இளைஞர், அந்த பெண்ணைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும், முள்செடிகள் நிறைந்த தனிமையான பகுதியில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்த பயங்கரமான சூழ்நிலையில், அந்த பெண் துணிந்து கத்தி கூச்சல் விடுத்ததையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, தர்ம அடி கொடுத்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கனகமாசத்திரம் காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து   போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞரொருவர் பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் இவ்வாறு வடமாநில இளைஞர்கள் பாலியல் வழக்குகளில் சிக்கிக்கொள்வது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.