சென்னை மாவட்டத்தில் குடிநீர் வாரிய ஒப்பந்தத்திற்கு சொந்தமான லாரி ஒன்று சென்னீர்குப்பம் -ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. பின் சாலையில் சென்ற கார், இருசக்கர வாகனம் போன்றவற்றின் மீது மோதிய லாரி பின்பு மின்கம்பத்தில் மோதி நின்றது.

இதனால் சாலையில் சென்ற கார்கள் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து சாலையில் சென்ற மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

எனவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்பு அப்பகுதி மக்கள் லாரி ஓட்டுனரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.