சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(33). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று யூனியனில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் குரூப்-1 தேர்வு எழுதினார்.

அந்த தேர்வில் வெற்றி பெற்ற நடராஜன் நேர்முகத் தேர்வு வரை சென்றுள்ளார். ஆனால், இந்த தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்ணை விட தன்னுடைய மதிப்பெண் குறைவாக இருந்ததால் நடராஜன் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நடராஜன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நடராஜனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடராஜனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று நடராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்பு இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கு அரசு மற்றும் தேர்வு வாரியங்கள் ஆலோசனைகள் மற்றும் மனநல சேவைகள் போன்ற ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.