மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த குமார் (வயது 34) என்ற நபர், போலி நில பத்திரங்களை பயன்படுத்தி வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மொத்தம் ₹20 கோடி வரை சுருட்டிய இவர், 11-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி வரை மட்டுமே படித்திருந்தாலும், நிஜமான பத்திரங்களைப் போல் நகல்களை தயாரிப்பதில் குமார் நிபுணர் என போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து, தந்தையான வீடுகளையும், பிறரது நிலங்களையும் போலியாக பதிவு செய்து, வங்கிகளில் கடன் பெற்று சொகுசாக வாழ்ந்துள்ளார்.
குமார் மீது ஏற்கனவே 10 வங்கி மோசடி வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் திருந்தாமல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்த குமார், சமீபத்தில் மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவரின் தாயாரின் சொத்து பற்றிய போலி பத்திரங்களை வைத்து ₹3.3 கோடி கடன் பெற்ற மோசடியில் சிக்கினார்.
இந்த வழக்கில் குமார் மற்றும் அவரது கூட்டாளி ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக அவரது மற்ற கூட்டாளிகள் கலைசெல்வி, ஸ்ரீதர், பிரசாந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு 3% கமிஷன் கொடுத்து கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வங்கிகளில் உள்ள சில ஊழியர்கள், இந்த போலி பத்திரங்களைச் சரிபார்க்காமல் கடன் வழங்கியதால்தான் இத்தகைய மோசடிகள் நடக்கின்றன எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பலமுறை கைது செய்யப்பட்டும் திருந்தாத குமார் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
