விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள மண்டவாய்புதுக்குப்பம் கிராமத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. முத்து என்ற பெண் வேறு சமூகத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவரை  கடந்த பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து அமைதியாக வாழ்ந்து வந்தனர்.

ஊரில் இருக்கும் சில பஞ்சாயத்தார் குழுவினர் கடந்த சில ஆண்டுகளாகவே அந்த தம்பதியருக்கு எதிராக அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாயத்தார் மாறும்போதும், “ஊரை விட்டு வெளியேற வேண்டும்” என அந்த தம்பதியரிடம் கூறி வந்தனர்.

சமீபத்தில், மூன்று நாட்களுக்கு முன்பு, அந்த குடும்பத்தை வலுக்கட்டாயமாக ஊரிலிருந்து ஒதுக்கி, அவர்களுக்கு கடைகளில் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கூடாது என பஞ்சாயத்து குழுவினர் கடை வியாபாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட முத்து, தன் குழந்தைகளுக்குப் பால் வாங்க கூட இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலால் மனஉளைச்சலுக்கு ஆளான முத்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. சரவணன், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மரக்காணம் காவல் ஆய்வாளர் பரணி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பஞ்சாயத்தில் உள்ள 9 பேர், கோவில் மைக் செட் மூலம் “ஊரை விட்டு சென்றுவிட வேண்டும்” என அறிவித்ததாகவும், பாலு, ராஜா, சங்கர், தங்கராஜ், ராஜ்குமார், ஜெகன், சத்தியமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் இதில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.