மேகாலயா மாநிலத்தின் ராஜாஜு மற்றும் தியங்கன் கிராமங்களில் உள்ள 2 நிலக்கரி சேமிப்பு மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 4,000 டன் நிலக்கரி காணாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலக்கரி சட்டவிரோதமாக கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

இதையடுத்து, மேகாலயா மாநில உயர்நீதிமன்றம் அரசு மீது கடும் கண்டனம் வெளியிட்டு, காணாமல் போன நிலக்கரிக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேகாலயா மாநிலத்தின் அமைச்சர் கீர்மென் ஷில்லா அளித்த விளக்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறுகையில், “இந்தியாவில் அதிக மழைபெறும் மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. கனமழையால் எந்த விதமான விபத்தும், மாற்றமும் ஏற்படக்கூடும்” என்றார்.

மேலும் அவர் விளக்கியதாவது, “கிழக்கு ஜெயின்டியா மலை பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், வங்கதேசத்தை நோக்கி பாய்கிறது. அந்த வெள்ளத்தால் நிலக்கரி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். எனவே, இது ஒரு இயற்கை சம்பவம் என்றும், இது குறித்து சட்டவிரோத கடத்தல் என கூறும் வகையில் இதுவரை எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த வினோதமான விளக்கம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. மழை நிலக்கரியை அடித்துச் செல்வது சாத்தியமா?, இது ஒரு பொருளாதார மோசடியாகவே இருக்கக்கூடும் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 4,000 டன் நிலக்கரி காணாமல் போனதும், அதற்கான விசாரணைக்கு மழை காரணம் என அமைச்சர் அளித்த விளக்கம், அரசு இயங்கும் முறை குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.