இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தொழில்நுட்ப முன்னேற்றங்களை எதிர்கொள்வதற்காக அதிரடி முடிவெடுத்து சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது, நிறுவன ஊழியர்களின் 2 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களும் இந்த முடிவால் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரை, இந்த பணிநீக்க செயல்முறை நடைபெறும் என நிறுவனம் அறிவித்துள்ளது. TCS நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கிருத்திவாசன், இது தான் தனது பதவியில் இருக்கும்போது எடுத்த மிகக் கடுமையான முடிவுகளில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கை குறிப்பாக நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை அதிகமாக பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிருத்திவாசன் மேலும் கூறியதாவது, “செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட வேகமான மாற்றங்கள் காரணமாகவே, வேலை செய்யும் முறைமைகள் முழுமையாக மாறிவருகின்றன. TCS, தனது எதிர்கால வளர்ச்சிக்காக முன்கூட்டியே தயாராக வேண்டும். அதனால், இது தவிர்க்க முடியாத நிலைமையில்தான் மேற்கொள்ளப்படும் முடிவாகும்” என்றார்.
இந்த முடிவால், TCS-ல் பணியாற்றும் பல ஆண்டுகளான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியின் நிழலில், நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மனித வேலையை மாற்றும் பாதையில் பயணிப்பது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. TCS-இன் இந்த நடவடிக்கை, மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்திருக்க வாய்ப்புள்ளது.
