ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் ஏராளமான மீனவர்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் அங்கு வாழும் மீனவர்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் 80 விசைப்படகுகளில் இன்று தென்கடல் பகுதியான மன்னர் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன் பிடிக்க சென்ற அவர்களில் அனைவருமே ஏராளமான மீன்களுடன் கரை திரும்பினர். இதனை தொடர்ந்து அவர்களில் ஒரு மீனவரின் விசைப்படகில் மட்டும் சுமார் 8 கிலோ எடையுள்ள அறிய வகை மீன் ஒன்று சிக்கி இருந்தது.

அந்த மீனுக்கு வால் இல்லாமல் வெறும் துடுப்பு மட்டுமே இருந்தது. கரைக்கு சென்ற பிறகு அந்த மீன் பற்றி ஆராய்ச்சி செய்த போது, அது அரிய வகை சூரிய மீன் என தெரியவந்தது. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், இந்த வகையான மீன்கள் எளிதில் கிடைப்பதில்லை.

ஆழ்கடல் பகுதிக்கு சென்றால் மட்டுமே இந்த வகை மீன்களை காண முடியும். இந்த மீன்கள் நீரில் அதிவேகமாக நீந்தும் தன்மை கொண்டது. வெளிநாடுகளில் தான் இந்த வகை மீன்களை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். காற்று அதிகம் வீசும் காலங்களில் தான் இந்த வகை மீன்கள் வலையில் சிக்கும்.

இதுகுறித்து தகவலறிந்த மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் இந்த மீனை ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதேபோன்று மற்றொருவரின் படகிலும் நரி மீன் என்று சொல்ல கூடிய சுமார் 8 கிலோ எடையுள்ள 2 மீன்கள் வலையில் சிக்கியது.