சீனாவில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் மனித உணர்வுகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பது குறித்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜியாங் என்ற 75 வயது முதியவர், ஆன்லைனில் காணப்பட்ட ஒரு “பெண்ணிடம்” காதலாகிப் போனார். தினமும் அவரது மெசேஜ்கள், பாச வார்த்தைகள் மற்றும் வீடியோக்களுக்கு பதில் அளிக்க அவரின் தொலைபேசியை பார்த்துக்கொண்டே இருந்தார். ஆனால், அதிர்ச்சியாக அந்த “பெண்” செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் டிஜிட்டல் நபரென்பது பின்னர் தெரியவந்தது.

ஜியாங், AI பெண்ணின் வார்த்தைகளை உண்மையாக நம்பி, அவரது உணர்வுகளைத் திரும்பத் திரும்ப பகிர்ந்தார். அவரிடம் அதேபோல பாசமாக பதிலளித்த AI, நிஜ வாழ்க்கை துணையென அவரை நம்பவைத்தது. இதனால், ஜியாங் தனது நிஜ மனைவியிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவம் சினிமா கற்பனையாக இருக்கலாம் என்றாலும், சீனாவில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

வயதானவர்கள், குறிப்பாக தனிமையில் வாழ்பவர்கள், AI உருவாக்கிய வீடியோக்களில் வரும் ‘உணர்ச்சி சார்ந்த’ பேச்சுகளால் ஈர்க்கப்படுகின்றனர். அழகான பெண்கள், மாணவிகள், மற்றும் ‘பாசமிகு’ ஆண்கள் என பல்வேறு தோற்றங்களில் இந்த AI நபர்கள் பேசி, உணர்வுகளைத் தூண்டுகின்றனர். இவை வழியாக விற்பனை செய்யப்படும் பொருட்கள் (வளையல்கள், பால், மருந்துகள்) அனைத்தும் போலியானவை என்பதையும், அந்த நபர்கள் உண்மையானவர்கள் அல்ல என்பதையும் அவர்கள் உணரவில்லை.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி பாராட்டத்தக்கதாயினும், உணர்ச்சி சார்ந்த தேவை மற்றும் நம்பிக்கையால் நிதி இழப்பும், மனநல பாதிப்பும் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கவனிப்பதும், AI மூலம் உருவாகும் உணர்ச்சி சார்ந்த பழக்கங்களை புரிந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகியுள்ளது.