திருப்பூர் மாவட்டம் பி.என். ரோடு பூலுவபட்டி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல அனைத்து பெண்களும் தூங்கிவிட்டனர்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவர்களின் செல்போன்கள் காணாமல் போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி விடுதி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் மர்ம நபர் ஒருவர் தன் முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டு விடுதிக்குள் நுழைந்து செல்போன்களை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் அந்த நபர் யார் என்பது குறித்து விடுதியின் அருகே உள்ள பனியன் கம்பெனியில் விசாரணை நடத்தினர். அப்போது செல்போனை திருடியவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் சங்கர் பிரபு(25) என்பது தெரிய வந்தது.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டார். எனவே ராம்சங்கரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 செல்போன்களில் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.