பீகார் மாநிலத்தில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த பணியானது வரும் 25ஆம் தேதி முடிவடையும் நிலையில், 7.89 கோடி பேரில் 6.96 கோடி பேர் மட்டுமே மனு கொடுத்துள்ளனர். அதில் 2.2% பேர் நிரந்தரமாக இடமாற்றம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. 1.59 % வாக்காளர்கள் உயிரோடு இல்லை என்றும், 0.73% பேரின் பெயரானது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது தேர்தல் கமிஷனின் பரிந்துரையின் படி 12,817 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்த வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 895 லிருந்து, 90 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது என்று
அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் 12 ஆயிரத்து 479 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் வைக்கப்படும் என்றும், மீதமுள்ளவை அருகில் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் மாவட்ட வாரியான பட்டியல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி அடுத்த மாதம் 1 ம் தேதி வெளியாகும் நிலையில், 25ஆம் தேதிக்கு பிறகு வரும் கணக்கெடுப்பு சமர்ப்பிக்கப்படாத பெயர்கள் சேர்க்கப்படாது. மேலும் பீகார் மாநிலத்தில் 41.64 லட்சம் வாக்காளர்கள் அவர்களது இருப்பிடங்களில் வசிக்கவில்லை என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
