பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் 15 வயது சிறுவன் ஒருவருக்கு நேர்ந்த மிகவும் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேதி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுவன், ஜூலை 18ஆம் தேதி மாலை, அதே கிராமத்தைச் சேர்ந்த நிதின் (வயது 23) மற்றும் ரோஹித் (வயது 24) ஆகிய இருவரால் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், சிறுவனை வேறொரு கிராமத்திற்கு அழைத்து, வழியில் அடித்து, தாக்கி, அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக, சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், அமேதி மாவட்ட பஜார் ஷுகுல் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அந்த காவல் நிலைய எஸ்.எச்.ஓ அபினேஷ் குமார் கூறுகையில், “குற்றச்சாட்டுக்கள் மிகக் கடுமையானவை. சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தையும்,  கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழும் வகையில், இந்த சம்பவம் சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.