திமுகவினர் மேற்கொண்டு வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் ஆதார் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வருவதை தடுக்க கோரி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற நபர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த இயக்கத்தின் பெயரில் திமுகவினர், வீடு வீடாக சென்று, மக்கள் அனுமதி இல்லாமல் சுவரொட்டிகளை ஒட்டி, ஆதார் எண், வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு நகல் உள்ளிட்ட ஆவணங்களை கோருவதாகவும், இதனால் மக்களின் தனியுரிமை மீறப்படுவதாகவும் அவர் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தங்களது வீட்டில், முதல்வர் ஸ்டாலின் படம் மற்றும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டரை ஒட்டியதோடு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் தகவல்களையும் கேட்டு தொந்தரவு செய்தனர்.

இந்த ஆவணங்களை தர மறுத்ததால், “மாதந்தோறும் பெறும் அரசு நிதியை நிறுத்தி விடுவோம்” என மிரட்டியதாகவும், செல்போன் எண்களை கேட்டு, அவர்களை திமுகவில் உறுப்பினராக பதிவு செய்து விட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் விருப்பமின்றி, கட்டாயமாக இந்த இயக்கத்தில் சேர்த்துவிடப்படுவது அரசியல் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு எதிரான செயல் என்றும், தேர்தல் சட்டங்களைப் புறக்கெண்டதையே ஒத்ததாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் அமைப்பின் அனுமதியின்றி தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளையும் பாதிக்கிறது எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து, திமுகவினர் சேகரித்து வைத்திருக்கும் அனைத்து ஆதார் மற்றும் தனிப்பட்ட தகவல்களையும் உடனடியாக அழிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை மேற்கொண்டு, திமுக பொதுச் செயலாளர்மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.