திருநெல்வேலி மாவட்டம் சுண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானமுத்து. இவருக்கு மனைவி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களாக மாசானமுத்து பூனே சென்று இட்லி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வருவதற்காக மும்பையில் இருந்து ரயிலில் புறப்பட்டுள்ளார். ஆனால் தவறுதலாக மாசனமுத்து பாட்னா விரைவு ரயில் ஏறியதால் மத்திய பிரதேசத்திற்கு சென்று மொழி தெரியாமல் சிரமப்பட்டு போலீசாரின் உதவியை நாடியுள்ளார்.
ஆனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி உள்ளனர். அங்கு விசாரணையின் போது மாசானமுத்து உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாசானமுத்துவின் மகன் சுஜித் கூறியதாவது, கன்ச் பசோடா போலீசார் எனது தந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் அவரது இறப்பிற்கு அவர்களை பொறுப்பேற்க வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். மாசானமுத்துவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
