நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவன் சபரி கண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்குப் பின்னணியாக, பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளே காரணமா என சந்தேகம் எழுந்த நிலையில், மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு, மர்ம நபர்கள் அந்த பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பள்ளி வேன்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. அதன் பேரில், போலீசார் விசாரணையை தொடங்கி, தடய அறிவியல் நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்து, தீவைத்ததற்கான சாட்சியங்களை சேகரித்தனர்.

இந்த தாக்குதலில் வேன்கள் மட்டுமன்றி ஒரு கட்டிடமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் இந்தச் சம்பவத்தில்  “சொத்தை சேதப்படுத்தல்” மற்றும் “தீவைக்கும் நோக்கத்துடன் வெடி  பொருட்கள் பயன்படுத்தல்” உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் கண்காணிப்பில் அந்த பள்ளி தற்போது உள்ளது. மாணவனின் மரணம் தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால், இந்த வழக்கு தமிழகத்தில் பெரும்  விவகாரமாக மாறியுள்ளது.