விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் தென்னரசன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக லாவண்யா (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து தென்னரசன் தினசரி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 12ஆம் தேதியும் தென்னரசன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில் இது தொடர்பாக லாவண்யா தன் கணவனிடம் கேட்டு தகராறு செய்தார். அப்போது வீட்டில் இருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து தன் மனைவியை அவர் சுட்டுவிட்டார். இதனை தடுத்த அவரது தாயாரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.
இவர்களின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும் உறவினருமான வழக்கறிஞர் கார்த்திக் (28) என்பவர் அங்கு சென்று அதனை தடுக்க முயன்றார். அவரையும் தென்னரசன் துப்பாக்கியால் சுட்டார். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
தற்போது தென்னரசனின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் இரட்டை கொலை வழக்காக பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
